If you work hard, you will fail! -SURA (Subbiah Rajasekhar – Editor)

டாக்டர் பி. என். பிரபாகரன் – எனக்கு நன்கு தெரிந்த மனநல நிபுணர். சென்னை மயிலாப்பூரில் இருக்கும் அவர் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 10 மணிக்கு “உன் விதி உன் கையில்” நிகழ்ச்சியை நான் மிகவும் விருப்பத்துடன் பார்ப்பேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு தி. நகரில் அவர் “கஷ்டப்பட்டு உழைத்தால், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது” என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் உரையாற்றியதை நான் கேட்டேன். இதற்கு முன்பு நான் கேட்டிராத கோணத்தில் பல விஷயங்களையும் அவர் அலசினார். நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் கை தட்டினார்கள். அவருடைய இன்னொரு நிகழ்ச்சி இம் மாதம் 14 ஆம் தேதி தி. நகர். பி. டி. தியாகராயர் ஹாலில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இப்போது அவர் உரையாற்ற இருக்கும் தலைப்பு : “சர்க்கரை நோயாளியா? நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி!” தலைப்பிலேயே பரபரப்பு உண்டாக்கும் பிரபாகரனுக்கு, இரண்டு மணி நேரம் புதிய பார்வையில் விஷயங்களைக் கூறி அமர்ந்திருப்பவர்களைக் கட்டிப் போடும் அபார திறமை இருக்கிறது. எந்த நூலிலுமிருந்தும் எடுக்காத விஷயங்களை, தானே அவர் கண்டுபிடித்து கூறும்போது, அவை புதுமையாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. டாக்டர் பி. என். பிரபாகரனை சமீபத்தில் புது தில்லி தமிழ் சங்கம் அழைத்து கவுரவித்திருக்கிறது. “தினமணி” ஆசிரியரும், என் நெருங்கிய நண்பருமான திரு. கே. வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. பிரபாகரனின் சொற்பொழிவைக் கேட்பதன் மூலம், நிச்சயம் பார்வையாளர்களுக்கு பயன் இருக்கிறது. புதிய அறிவைப் பெறலாம். வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தலாம்.